தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

நேர்முகத்தேர்வில் வெற்றி பெற

நேர்முகத்தேர்வில் வெற்றி பெறவெற்றி முக்கோணத்தின்மூன்று கூறுகளாகிய அறிவு, திறன் மற்றும் குணநலன்கள் ஆகியவற்றில் மூன்றாவதும், மிகவும் நேர்முகத்தேர்வில் மட்டுமல்லாது வாழ்விலும் வெற்றி பெற இன்றியமையாததான சில குணநலன்கள் குறித்துத் தெரிந்து கொள்வோம்.

ஒரு மனிதன் பொறுப்புள்ளவனா? சொன்ன சொல் தவறாதவனா? கொடுத்த வேலையைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் கச்சிதமாக முடிக்கக் கூடியவனா என்றெல்லாம் உள்ளே புகுந்து ஆராய்ச்சி செய்ய இயலாது.ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் நீங்கள் நேரம்தவறாமையைக் கடைப்பிடிப்பவரா இல்லையா என்பதைக் கொண்டு உங்களை நேர்முகம் செய்பவர்கள் உங்களைப் பற்றி மதிப்பீடு செய்வர். நேர்முகத் தேர்வில் மட்டுமல்ல, வாழ்வில் எப்பொழுதுமே நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பது உங்களைப் பற்றிய நல்ல மதிப்பீடு உருவாக உதவியாக இருக்கும்.

எனவே நேர்முகத் தேர்வு நடக்கும் நாள் அன்று குறைந்த பட்சம் 15 நிமிடங்களுக்கு முன்னால், நேர்முகத்தேர்வு நடக்கும் இடத்தை அடைவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் பதட்டத்தையும் தவிர்க்க இயலும். அதே நேரம் அரை மணி அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன் அங்கு சென்று விட நேர்ந்தால், உடனடியாக உள்ளே செல்லாமல் அருகில் உள்ள உணவகங்கள் அல்லது நூலகத்தில் சென்று அமர்ந்துகொள்ளுங்கள். தாமதமாகச் செல்வது போலவே, மிகவும் முன்கூட்டியே செல்வதும் உங்களைப் பற்றிய சரியான மதிப்பீட்டைத் தராது.

நீங்கள் செல்லும் பணிக்கேற்ற சரியான உடைகளைத் தேர்ந்தெடுக்கவும். பளபளப்பான, மிக இறுக்கமான உடைகள், ஜீன்ஸ், அரைக்கை சட்டை, கசங்கிய உடைகள், உடல் வெளியில் தெரியும்படியான உடைகளைத் தவிர்க்கவும். எளிமையான அதே நேரம் கண்ணியமான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிதல் வேண்டும். அதிக ஒப்பனை (பெண்கள்), தாடி, நீளமான தலைமுடி, பெரிய மீசை (ஆண்கள்) இவற்றைத் தவிர்க்கவும். பெண்கள் தலையை விரித்து விட்டுக் கொள்வது, அல்லது பின்னி மிகவும் அதிகமான அளவு பூ வைத்துக்கொள்வது, அதிகம் நகைகள் அணிவது இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடக்கும் இடத்தில் யாருடன் பேச நேரினும், மரியாதையாகவும் பண்பாகவும் பேசவும். உங்கள் பழகும் விதம் குறித்த கணிப்பை மேலிடத்துக்குத் தருபவர்களாக அவர்கள் இருக்கலாம். நேர்முகத் தேர்வு அறைக்குச் செல்லுமுன், மூச்சை நீளமாக இழுத்துவிட்டு, கண்களை இறுக மூடித்திறந்து உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நேர்முகத் தேர்வின் பொழுது, வாயில் சூயிங்கம் சாப்பிடுவது, புகை பிடித்துவிட்டு, அந்த வாடையுடன் நேர்முகத் தேர்வு நடக்கும் இடத்திற்குச் செல்வது முதலியவை….நிச்சயம் எதிர்மறையான விளைவைத்தான் தரும். உங்கள் செல்பேசியை அணைத்துவிடுதல் அல்லது ஒலி எழுப்பாமல் இருக்குமாறு தகவமைப்பது அவசியம்.

நேர்முகத்தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் புன்னகையுடன் அனைவருக்கும் முகமன் கூறுங்கள். நேர்முகத் தேர்வாளர் அமரச் சொன்னபின், நாற்காலியில் நிமிர்ந்து அமருங்கள். நாற்காலி நுனியில் அமர்ந்துகொண்டு, மேசை விளிம்பினைப் பிடித்துக் கொள்வது, கால்களை ஆட்டுவது இவை தவறானவை. First Impression is the Best Impression என்பது ஆங்கிலப் பழமொழி. உங்களை நேர்முகம் செய்யுமுன்பே உங்களைப் பற்றிய உயர்வான மதிப்பீடு உருவாகும் வகையில் உங்கள் நடவடிக்கைகள் இருத்தல் வேண்டும். கைகளைக் குலுக்குகையில் அழுத்தமாக, தன்னம்பிக்கையுடன் கை குலுக்குங்கள். கண்களைப் பார்த்துப் பேசுதல் உங்கள் கண்ணியத்தையும், நேர்மையையும், தன்னம்பிக்கையையும் காட்டும்.

இன்றைய Corporate Culture சக ஊழியர்களையும் மேலதிகாரிகளையும் பெயர் சொல்லி அழைப்பதை ஊக்குவிக்கிறது. ஆனால் நீங்களாகவே அவர்களைப் பெயர்சொல்லி அழைக்காதீர்கள். Sir, Madam என்ற வார்த்தைகளையே உபயோகியுங்கள். அவர்கள் பெயர் சொல்லி அழைக்குமாறு கூறினால் Mr. Ms. என்ற அடைமொழியுடன் பெயர் சொல்லி அழைக்கலாம்……. தப்பில்லை.

கேள்விகளுக்கான விடைகளைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் கொடுக்கவும். கேட்ட கேள்விக்குத் தொடர்பில்லாமலும் வளவளவென்றும் பேசக்கூடாது. தெரியாத கேள்விகளுக்கு நேர்மையாக ‘மன்னிக்கவும். எனக்கு பதில் தெரியவில்லை’ என்று கூறிவிடுவது உத்தமம். தவறான உளறல்கள்— கண்டிப்பாக உங்கள் வாய்ப்பைக் கெடுத்துவிடக்கூடியவை. சற்றுக் கடினமான கேள்விகள் கேட்கப் படுகையில் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டு, ஓரிரு நிமிடங்கள் யோசித்து விடை சொல்லத் தொடங்குங்கள். வாக்கியங்கள் முழுமையாகவும், பிழையின்றியும் இருக்கவேண்டும். படபடவென்று வேகமாகப் பேசுதல், அல்லது மிகவும் இழுத்து இழுத்துப் பேசுவது நல்லதல்ல. அவ்வாறே, மிகவும் உரத்த குரலில் பேசுதல் அல்லது காதில் விழாத அளவு மெதுவாகப் பேசுதல் இரண்டும் தவறு. இனிமையாக அதே நேரம் அழுத்தமான குரலில் பேசவேண்டும்.

வினாக்களுக்குப் பதில் அளிக்கையில், தாடையைத் தேய்ப்பது, கைகளைப் பிசைவது, நாற்காலி அல்லது மேசை முனையை இறுகப் பற்றிக்கொள்வது, உடைகளின் நுனியை முறுக்குவது இதெல்லாம் உங்களைப்பற்றி ‘பக்குவமில்லாதவர்’ என்று நினைக்கத் தூண்டும்.

சில நேர்முகத்தேர்வாளர்கள் வேண்டுமென்றே உங்களை உசுப்பேற்றும் கேள்விகளைக் கேட்பது, உங்களைக் கோபமூட்டும் அல்லது அழவைக்கக் கூடிய வகையில் பேசுவது என்று உங்களைப் பரிசோதிப்பார்கள். கவலை வேண்டாம். உங்களை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். மன்னிக்கவும். நீங்கள் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை…. அல்லது இது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை என்று புன்னகையுடன் பதிலளியுங்கள். அவர்கள் உங்களை சோதிக்கிறார்கள் அவ்வளவுதான் என்று உங்கள் மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.

உங்களை, உலக விவகாரங்கள், அரசியல் மற்றும் பொதுவான செய்திகள் குறித்துக் கேட்கையில் நடுநிலையுடன் பதில் சொல்லுங்கள். உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புடன் எதையும் அலச வேண்டாம். யார் குறித்தும், எது குறித்தும் எதிர்மறையாகப் பேசாதீர்கள். மொத்தத்தில் உங்களை நேர்மறை அணுகுமுறை (Positive Approach) உடையவர் என்று அவர்கள் நினைக்கவேண்டும்.

நேர்முகத்தேர்வு முடிந்தபின், வாய்ப்பளித்தமைக்கு நன்றி மீண்டும் கை குலுக்குங்கள். நேர்முகத்தேர்வுக்கான முடிவுகளை எப்பொழுது அறிந்துகொள்ளமுடியும் என்று (அவர்களாக முதலிலேயே கூறாத பட்சத்தில்) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்