தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

என்னிடம் விட்டுச் சென்ற உன் பார்வைகள்

அதி வேக ஊர்திகளாலும் அவசரங்களாலும்

ஆக்கிரமிக்கப் பட்ட தெருவில்

கவனத்தைப் பதித்துச் சென்ற

காலைப் பொழுதொன்றில் நீயழைத்தாய்:

என் பெயர் கூறியழைத்தாயோ....

எதைச் சொல்லிக் கதைத்தாயோ....

இரைச்சலில் நழுவவிட்டு விட்டேன் -

உனது ஆரம்பச் சொற்களை - பின்னர்

கம்பீரமான குரலில் உனது பெயர் கூறி

நீளமான சொற்களை நீயுதிர்த்தாய்!


திகைத்துத் தடுமாறி 

தெருவிலிருந்து நீங்கிய பின் உன்னுடன் கதைத்தேன்

பிரிவைச் சொன்னாய்:

பல நூறு நட்சத்திரங்கள் மின்னிய வானத்தைச் சுருட்டி

எங்கோ எறிந்து

அருவிகளையும் ஓடைகளையும்

என்னிடம் விட்டு விட்டு

அதற்கப்பால் நீ போனாய்!

பண்பாடுகளாலும் விழுமியங்களாலும்
நீ எனக்களித்த கெளரவங்களாலும்
கட்டப் பட்டுக் கிடக்கிறேன்
ஒன்றுமே அறியாதவனா நீ?
திரும்பித் திரும்பிப் பார்த்து
எனதான்மாவிலிருந்து எதனையோ
எடுத்துச் சென்ற பின்பும்
ஒன்றுமே அறியாதவனா நீ?

காற்றில் உதிரும் இலைகளோடு
எந்த ஒசையுமற்று உதிர்ந்து கொண்டிருக்கிறேன்
கிளை பரப்பித் தளிர்த்தோங்கிட நான்
காற்றிலே இசை நிரப்பித் தந்தாய் நீ

கண்ணீரையும் பிராத்தனையையும்
ஏந்தி உயர்கின்ற கரங்களின் விரலிடுக்கினூடு
உறவின் நூலிழைகள் வழிகின்றன.

நீ என்னிடம் விட்டுச் சென்ற
ஈரப் பார்வைகள்
இன்னும் எனை உற்றுப் பார்த்தவாறே கிடக்கின்றன.

நன்றி : ஃபஹீமாஜஹான்

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்