ஷியாக்களால் துவங்கி வைக்கப்பட்ட இந்த படுகளத்தில் நடக்கும் தற்போதைய அனாச்சாரங்கள், அட்டூழியங்கள், கேலிக் கூத்துக்கள் ஆகியவற்றை முதலில் வரிசையாகப் பார்ப்போம்.
பஞ்சா எடுத்தல், ஏழாம் பஞ்சா, தாம்பத்தியத்திற்குத் தடை, பத்தாம் பஞ்சா, பத்தாம் நாள் சந்தனக் கூடு, போதையில் சிலம்பாட்டம், மது போதையில் புலி வேஷம் போடுதல், நோய் நிவாரணத்தை கேட்டு தீக் கிணற்றில் உப்பு மிளகு போடுதல், தீமிதி, தீக்குளிப்பு, தீச்சட்டி தூக்குதல், மாவிளக்கு ஏந்துதல், அல்லாஹ் நமக்கு பரிசுத்தமாக்கி தந்த மீன் உணவை தடுத்து ஹராமாக்குவது, பெண்களின் கவர்ச்சி நடனம், ஆடல் பாடல்கள், ஏர்வாடியிலும் வெளியூரிலும் வசிக்கும் கன்னி பெண்களும், திருமணமான பெண்களும் அன்னியர்கள் முன் தன் அழகு அலங்காரங்களையும் மறைக்காமல் வெளிகாட்டி செல்வது, குழந்தை பாக்கியம் வேண்டி நேர்ச்சை, அதுமட்டுமில்லாமல் இவ்வருட சிறப்பம்சமாக குலுக்கல் பரிசு என்ற பெயரில் சூதாட்டம் போன்ற, இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து அநியாயமான செயல்களையும், முஸ்லீம் என்று கூறி செய்து வருகின்றனர். இஸ்லாத்திற்கும் இந்த அனாச்சாரத்திற்கும் என்ன சம்மந்தம் என்பதை சற்று நிதானமாக சிந்திப்பீர்களா?
மேலும் நபியின் நடைமுறை வாழ்க்கையில் அறியாமைக்கால நேர்ச்சைகளை தடைசெய்ததை கீழ்கண்ட சம்பவங்களின் மூலம் நாம் தெளிவாக அறியலாம்.
ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்களிடையே தொங்கிய படி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். (கஅபாவுக்கு) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கின்றார்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், இவர் இவ்விதம் வேதனைப் படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது’ என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரளி) நூல்: புகாரி 1865)
அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் கூட, இது போன்று தம்மை வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்யக் கூடாது எனும் போது அதை மற்றவர்களுக்காகச் நேர்ச்சை செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளங்கலாம். அப்படியே பாவமான காரியத்தில் நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்ற சட்டமும் இந்த மக்களுக்குத் தெரியவில்லை.
அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால், அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரளி) நூல்: புகாரி 6696)
அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை மறந்துவிட்டு, கற்பனையாக ஒன்றை ஏற்படுத்தி, அதை பஞ்சா என்று பெயரும் கூறி அல்லாஹ்விற்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கமான நேர்ச்சையை இந்த சந்தன கூடு சாவடிக்குள்ளும், கொடிமரத்திற்கும் செய்து வரும் இணைவைப்பு என்னும் மாபாதகம் நடப்பதை நாம் அனைவரும் தடுக்க வேண்டாமா? நாம் தடுக்க வேண்டும் என்பதை கீழ்வரும் நபிவழிச் செய்தி நமக்கு அறிவுறுத்துகிறது.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். (அந்த மரத்தை) தாத்து அன்வாத்’ என்று சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே.. அவர்களுக்கு தாத்து அன்வாத்து’ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்தி தாருங்கள் என்று கூறினோம்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்! அல்லாஹூ அக்பர்.! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும் என்று சொல்லி, என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாக பின்பற்றுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூவாக்கிதுல்லைசி(ரளி) நூல்: திர்மிதி 2106, அஹ்மத் 20892)
அந்த வார்த்தை தற்போது இந்த படுகளம் மூலம் மெய்படுத்தப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். எதை எதை எல்லாம் நபியவர்கள் தடுத்தார்களோ அவை அனைத்தும் ஒரே இடத்தில் நடத்தப்படுவது தான் இந்த படுகளம் என்னும் முஹர்ரம் மாத கொண்டாட்டம். எனவே யூத ஷியாக்களின் கூட்டுச் சதியால், உயிரினும் மேலான இஸ்லாமிய மார்க்கத்தை கீழான நிலையில் மக்களுக்கு காட்டுகின்றனர். இதனால் இஸ்லாத்தை விரும்புபவர்கள், நம்மிடம் உள்ள மூடப்பழக்கங்கள் இங்கேயும் இருக்கிறது என நினைத்து இஸ்லாத்தினுள் நுழைய தயங்குகின்றனர்.
இஸ்லாமிய கொள்கைகளை மேலோங்க செய்வதற்காக தியாகம் செய்ய வேண்டிய இளைய சமுதாயம் தான், இது போன்ற அனாச்சாரங்களை தடுக்க வேண்டியவர்கள். ஆனால் அவர்களோ இதை கண்டு கொள்ளாமல் இருப்பது எந்த வகையில் நியாமான செயலாகும்? நாம் செய்யும் தியாகம் தான் நமக்கு பின்னுள்ள இஸ்லாமிய சமுதாயத்தை நெருக்கடியில்லாமல் வாழ வைக்கும் என்பதை நாம் அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உலகில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தெளிவான அடிப்படையில தருவதே இஸ்லாத்தின் உன்னத நோக்கமாகும். எனவே இந்த தூய இஸ்லாம், இது போன்ற ஷியாக்களின் சதித்திட்டத்தினால் உருவாக்கப்பட்ட படுகளம் என்ற அனாச்சாரத்தை எப்படி ஆதரிக்கும் என்பதை ஒரு கணம் சிந்திக்கவும்.
மேலும் அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதை பாருங்கள்.
உங்களுக்கு முன் சென்ற தலைமுறையினரில் நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர பூமியில் நாசமுண்டாக்குவதை தடுக்கக் கூடிய நல்லோர்கள் இருந்திருக்கக் கூடாதா? அநீதி இழைத்தோர் சொகுசு வாழ்க்கையில் முழ்கினார்கள். அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர். இன்னும் ஊரார் சீர்திருத்துவோராக இருக்கும் நிலையில் அநியாயமாக அவ்வூரை அல்லாஹ் அழிக்க மாட்டான். (அல்குர்ஆன் 11: 116-117)
எனவே அல்லாஹ்வின் அழிவும் வேதனையும் நம்மையும், நமது சந்ததிகளையும் அடையும் முன்பே நம்மை தற்காத்துக்கொள்ள, இந்த படுகளத்தை தடுத்தே ஆகவேண்டும் என்பதை யாரும் மறக்க வேண்டாம்.
எனவே நாம் நம்முடைய பொருளாதாரத்தில் இருந்து ஒரு பைசா கூட இந்த அனாச்சாரங்களுக்கு செலவு செய்யவோ, அல்லது வேடிக்கை பார்க்கவோ, வேறு எவ்வகையிலும் ஒத்துழைப்பு கொடுப்பதோ இஸ்லாமிய அடிப்படையில் அல்லாஹ்விடம் நமக்கு வேதனையையும், தண்டணையையும் ஏற்படுத்திவிடும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!