நமது இயல்பு வாழ்வுக்கு உழைப்பும், உணவும் அத்தியாவசிய, அவசியத் தேவைகளாகின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன.
கடின உழைப்பும், விளையாட்டும் இலகுவில் நமது உணவு தனம மாதலையும் உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம், அழுத்தம், சீர்படுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.
எனவே, நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின, உழைப்பு, அல்லது விளையாட்டு, அல்லது கராத்தே நடனம் அல்லது யோகா, அல்லது பயிற்சிகள், அல்லது ஓட்டம் அல்லது தோட்ட பணிகள் அவசியம் தேவை.
ஆனாலும் இவைகளை போட்டிகளில் பங்கேற்கும் அளவில் பயிற்சி மேற்கொள்ளத் தேவை இல்லை. அவசர, அதிவேக உலகில் தினமும் உழைப்பு, விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட மயங்குகிறோம். சோம்பேறி ஆகிவிடுகிறோம். மறந்து விடுகிறோம். நாளை செய்வோம் என நினைக்கிறோம். இவைகளை ஒரு நாள் தவற விட்டாலும் பின் தொடர்வதில்லை சோம்பல் வயப்படுகிறோம்.
இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகின்றது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது. உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன.
எனவே உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்திற்கு மாற்றாக நடைபயணம், நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நமது உயிர் உயரி உணர்வுகளைப் பெற நடை அவசியம் தேவை.
நடைபயிற்சியால் நமது உடல் இரத்த ஓட்டம் எல்லா திசுக்களிலும் மேம்படுவதுடன் உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது. சுறுசுறுப்பு அதிகரிப்பதுடன் நமது மெட்டாபாலிசம், உணவு தன்மையாதல், ஜீரணம் சிறப்படைகிறது நெடுநாள் பிணியாளர்கள் நலம் பெற நடைப்பயிற்சி உதவி புரிகிறது.
நடப்பது நமது கால்களுக்கு, நமது உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், தெம்பையும் தருகின்றது உடல் நலிவைக் குறைத்து உடல் வலிவைத் தருகின்றது. பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது எவ்வயதிலும் நடக்கலாம் எவரும் நடக்கலாம் எப்போதும் நடக்கலாம் நடை ஒரு உடம்பின் ஒரு இயல்பான இயக்கம். அதன் அருமையை பெருமையை உடனடியாக உணர்வோம் அறிவோம் நடக்கத் தொடங்குவோம்.
பிற விளையாட்டுகள், பயிற்சிகள் நடைப்பயிற்சி, பயணம் ஓர் ஒப்பீடு
"ஆபத்தில்லா ஆரோக்கிய பயிற்சியை நாம் நாட வேண்டும். பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, குதிரையேற்றம் போன்ற விளையாட்டுகளை சிறுவயதில் விளையாடினாலும் வயதானபின் வேலைக்கு சென்ற பின் பலரும் மறந்தே விடுகின்றன.
பலரின் கூட்டணி இருந்தால் மட்டுமே இவைகளை விளையாட இயலும். பாதியில் நிறுத்த இயலாது வெப்ப கலோரி, சக்தி அதிகம் செலவழியும். உடலுக்கு ஊறுதரும் ஆபத்து மிகுந்துள்ளது. அதற்கான கருவிகள் மைதானம் தேவை. அதற்கான கோச் தேவை. நினைத்த இடத்தில் விளையாட இயலாது மேலும் இவைகள் போட்டியாகவே விளையாடப்படுகின்றன அதற்கான வேகமும், முனைப்பும் அதிகரிக்கும் சமயம் ஆபத்து அதிகரிக்கிறது. ஆரோக்கியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.
நீச்சல், ஜிம், வேக ஓட்டம், மெது ஓட்டம் பளு தூக்குதல், தோட்ட வேலை, ஏரோபிக்ஸ் பயிற்சிகள், நாட்டியம், குதிரையேற்றம், சைக்கிள் விடுதல், கடின உழைப்பு போன்றவைகள் மிகச் சிறந்த பயிற்சிகள். இவைகளிலும் மிதமான வெப்ப கலோரி, உடல் சக்தி செலவழிகின்றன சில பயிற்சிகளில் கருவிகளும் தேவைப்படுகின்றன சில நேரங்களில் வழிநடத்தும் மாஸ்டர்கள் தேவை. அதற்கேற்ற இடம், சூழல், கருவிகள், பொருளாதாரம் தேவைப்படுகின்றன தினமும் தொடர்வதில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது வயது அதிகரித்தவர்கள் இப்பயிற்சிகள் சிலவற்றை தொட இயலவில்லை.
மேற்சொன்னவைகள் விளையாட்டு பயிற்சிகள் என்ற முறையில் வருகின்றன வாழ்நாள் முழுவதும் ஓட இயலுமா? நமது உடல் அமைப்பு அப்படி அமைந்துள்ளதா? வாழ்நாள் முழுவதும் தினமும் விளையாடுவோர் குறைவு. குழந்தை சிறுவர்களாக இருக்கும் சமயம் நமக்கு நாமே கூட விளையாடுகிறோம். துள்ளி ஓடுகிறோம். பெரியவர்களானதும் தினசரி விளையாட இயலவில்லை. வேலைப் பணிகள் நிமித்தம் சிரமப்படுகிறோம்.
ஆனால் வாழ்நாள் முழுவதும் நடக்கலாம். அதற்கான அமைப்பில் நமது உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன என்கின்றனர் நடைவல்லுனர்கள். நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம்.
75 மில்லியன் அன்பர்கள் நடைப் பயிற்சியை ஆரோக்கியம் பெறும் பொருட்டு தினமும் கடைப்பிடிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
நடைப்பயிற்சி ஆபத்து இல்லாப் பயிற்சி எனலாம்.
நடைப்பயிற்சிக்கு வழிநடத்தும் வல்லுநர்கள் தேவை இல்லை.
நடைப்பயிற்சிக்கு தனியான மைதானம், இடம் தேவை இல்லை.
நடை நமது வாழ்வின் ஓர் அங்கம். வாழ்நாள் முழுவதும் அதன் முழுப் பயனை நுகர வேண்டும். அனுபவிக்க வேண்டும்.
சென்னையில் காலையில் காரில் பவனி வந்து கடற்கரையில் அதிகாலையில் நடப்பவர்கள் ஏராளம். காலை நடைகாட்சி திருவிழாபோல் இருக்கும். சென்னை, கோவை, மதுரை போன்ற பல ஊர்களிலும் காலையில் ஏராளமானோர் நடக்கப் பழகிவிட்டனர். கூட்டணியாகவும், தனியாகவும் கிளப் மூலமாகவும் நடக்கின்றனர்.
பல மருத்துவ வல்லுனர்கள் மாத்திரை, மருந்துகளை நம்புவதைவிட நடைப்பயிற்சிகளை இயன்றவரை கடைப்பிடிக்க வற்புறுத்துகின்றனர். வலியுறுத்துகின்றனர். பலருடைய வாழ்வில் காலையில் நடையும் அருகம்புல் பானமும் பிரிக்க இயலாத அளவிற்கு ஒன்றிவிட்டன. ஆரோக்கியத்தின் அருமையை அவர்கள் ரசிக்கின்றனர். ருசிக்கின்றனர். நாமும் அதற்குத் தயாராவோம்.
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!