மைசூருக்குச் செல்லும்பொழுது கண்ட காட்சி. சாலை முழுவதும் குரங்குகள். எங்கள் வாகனத்தைக் கண்டதும் அவை அருகில் ஓடி வந்தன. முதல் முறையாக இத்தனை குரங்குகளையும் கண்டதில் எங்களுக்கு அதீத மகிழ்ச்சி. மகிழ்ச்சியில் வாகனத்தில் இருந்தோர் ஆர்ப்பபரித்தனர்.
கொண்டு வந்திருந்த பழங்களில் ஒரு பழத்தை எடுத்து அந்தக் குரங்குகளை நோக்கியெறிந்தார் ஒருவர். ஆஜானுபாகுவாக, வலிமையாக இருந்த பெரிய குரங்கு ஒன்று ஓடி வந்து அந்தப் பழத்தைக் கையகப்படுத்தியது. மற்ற குரங்குகள் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருக்கவே அந்தப் பெரிய குரங்கு பழத்தைத் தின்று முடித்தது.
வாகனத்திலிருந்து குட்டிக் குரங்குகளை நோக்கி ஒரு பழம் எறியப்பட்டது இப்பொழுது. பழம் தரையில் விழ வேண்டிய சமயத்தில் அதே பெரிய குரங்கு பாய்ந்து வந்து அந்தப் பழத்தையும் ‘அலேக்’காகப் பிடித்தது. பெரிய குரங்கு அந்தப் பழத்தைப் பதம் பார்க்கும் சமயத்தில் குட்டிக் குரங்குகளை நோக்கி உடனடியாக அடுத்த பழம் வீசப்பட்டது.
என்னே ஆச்சரியம்! முந்தைய பழத்தை வாயில் தள்ளிக்கொண்டே பாய்ந்து வந்து அந்தப் பழத்தையும் ‘லபக்’கென்று பிடித்தது பெரிய குரங்கு. வாகனத்திலுள்ளோருக்கும் அதிர்ச்சி, எமாற்றம்! குட்டிக் குரங்குகளும் பரிதாபமாக விழித்தன. குட்டிக் குரங்குகளைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் பெரிய குரங்கு தன் வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தது.
இப்பொழுது வாகனத்தில் இருந்தோர் ஒரு காரியம் செய்தனர். ஒரே சமயத்தில் ஒரு பழத்தை பெரிய குரங்கை நோக்கியும், இன்னொரு பழத்தை குட்டிக் குரங்குகளை நோக்கியும் வீசினார்கள். ஆனால் இரண்டு பழங்களையும் லாவகமாகப் பிடித்து தன் வல்லமையைக் காட்டியது அந்த ஆஜானுபாகக் குரங்கு. குட்டிக் குரங்குகளைப் பரிதாபமாகப் பார்த்தபடியே எங்கள் வாகனம் புறப்பட்டது.
பலமுள்ளவன் பறிப்பான் என்பது காட்டிலுள்ள நீதி.
பலமுள்ளவனுக்கும், பலஹீனமானவனுக்கும் இடையிலுள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதுதான் கலாச்சார உலகின் இலட்சியம். ஆனால் காட்டு நீதியைத்தான் இன்று உலகம் நடப்பிலாக்குகிறது.
பலமுள்ளவன்தான் இன்று நீதியை வரையறுக்கிறான். சட்டமியற்றுகின்றான். உரிமைகளைக் கேட்பவர்கள் அவனுக்கு எதிரி. தன்னுடைய எதிரியை ஒட்டுமொத்த உலக மக்களும் எதிரியாகக் காண வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். இந்த ஈனச் செயலை உலகமும் ஏற்றுக்கொள்கிறது.
தன்னை எதிர்த்து விரலை நீட்டியவனுக்கு நேராக வன்சக்திகள் துப்பாக்கியை நீட்டுகின்றன. புரோகிதர்களும், பண்டிதர்களும், அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும் அடங்கிய பொது சமூகம் இந்த வன்சக்திகளுக்கு சேவைகள் புரிகின்றன.
ஆனால் அல்லாஹ்வின் உதவி ஏதாவது ஒரு வாசல் வழியாக வந்தே தீரும். அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்:
நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம். (சூரத்துல் முஃமின் 40 : 51)
இறையுதவியின் வாசல் திறக்கப்பட்டே தீரும். தீமைகளுக்கெதிராக எழுந்து நிற்கின்ற, எதிர்த்து நிற்கின்ற சாட்சிகள் எங்கெல்லாம் உயர்கின்றதோ அங்கெல்லாம் இறையுதவியின் வாசல் திறக்கும். சாட்சிகளாக மாறி முன் அடியெடுத்துச் செல்லவேண்டியதுதான் இறைவிசுவாசிகள் செய்ய வேண்டியது. யாருக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!