தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

மறந்துவிடாதீர்கள்! இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்

இந்தியா முழுவதும் இரண்டாம் கட்டமாக 2011, பிப்ரவரி 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிநடை பெறுகிறது. தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் 1 1/2 லட்சம் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட உள்ளார்கள். ஒவ்வொருவரும் 150 முதல் 200 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வீடு வீடாக நேரில் சென்று விபரங்களை சேகரிப்பார்கள். இதற்காக பிரத்யேகமான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 29 கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கேட்டு அதில் பூர்த்தி செய்ய வேண்டும்.
மொத்தம் 29 கேள்விகள்: மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வீட்டில் உள்ளவர்களிடம் 29 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான வினாக்களை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் தயாரித்துள்ளது. ஒரே வகையான வினாக்கள் அனைத்து மாநில மொழிகளிலும் அச்சடிக்கப்பட்டுள்ளன.


கேள்விகள்:
  1. நபரின் பெயர் (குடும்பத் தலைவரில் இருந்து தொடங்கும்)?
  2. குடும்பத் தலைவருக்கு உறவு முறை?
  3. இனம்?
  4. பிறந்த தேதி மற்றும் வயது?
  5. தற்போதைய திருமண நிலை? 
  6. திருமணத்தின் போது வயது? 
  7. மதம்?
  8. தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரா? 
  9. மாற்றுத் திறனாளியா? 
  10. தாய்மொழி? 

  11. அறிந்த பிற மொழிகள்? 
  12. எழுத்தறிவு நிலை? 
  13. கல்வி நிலையம் செல்பவர்களின் நிலை? 
  14. அதிக பட்ச கல்வி நிலை? 
  15. கடந்த ஆண்டில் எப்போதாவது பணி செய்தவரா? 
  16. பொருளாதார நடவடிக்கையின் வகை? 
  17. நபரின் தொழில்? 
  18. வியாபாரம் அல்லது சேவையின் தன்மை? 
  19. வேலை செய்பவரின் வகை? 
  20. பொருளீட்டா நடவடிக்கை? 
  21. வேலை தேடுபவரா அல்லது வேலை செய்யத் தயாரா? 
  22. பணி செய்யும் இடத்துக்கு பயணம்?  
  23. கிராமத்துக்கு அல்லது நகரத்துக்கு வெளியே பிறந்தவர்களின் பிறந்த இடம்? 
  24. கடைசியாக வசித்த இடம்?  
  25. இடப்பெயர்ச்சிக்கான காரணங்கள்? 
  26. இடப்பெயர்ச்சிக்குப் பின் வசித்து வரும் காலம்? 
  27. உயிருடன் வாழும் குழந்தைகள்? 
  28. உயிருடன் பிறந்த குழந்தைகள்? 
  29. கடந்த ஓராண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை?

ஆகிய 29 கேள்விகள் அடங்கிய பட்டியலுடன் அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு வருவார்கள். கல்வி நிலை குறித்து கேள்விகள் கேட்கப்படுவதால் எத்தனை பேர் எழுத்தறிவு பெற்றவர்கள், பள்ளி மற்றும் உயர் கல்வியைப் பயின்றவர்கள் எத்தனை பேர் என்கிற விவரங்கள் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிய வரும்.

பின்னர் குடும்ப உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி சென்ற வருடம் ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் பதிவு செய்யப்படதன் மூலம் இப்பணி தொடங்கப்பட்டது, தற்போது இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 09.02.2011 அன்று முதல் 28.02.2011 வரை நடைப்பெறுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய வரலாறு
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1824-ம் ஆண்டில் அலகாபாத் நகரிலும், 1827-ம் ஆண்டில் பனாரஸ் நகரிலும், 1830-ம் ஆண்டில் டாக்காவிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதி காரப்பூர்வமாக முதன் முதலாக 1860-ம் ஆண்டில் தொடங்கி 1871 வரை கணக்கெடுப்பு நடந்ததாக வர லாற்று குறிப்புகள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு 1872-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்த திட்டம் வகுக்கப்பட்டது.

1931-ம் ஆண்டில் மட்டும் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் அந்த மாதிரியான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. விடுதலைப் போராட்டம், நாடு பிரிவினை, மதக்கலவரம், நிலநடுக்கம் ஆகிய காலங்களில் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு நடத்த முடியாத பகுதிகளில், இடைக்கணிப்பு முறையில் மக்கள் தொகை கணிக்கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டது.

1981-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்கள் தொகை பதிவேடுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் முழுமையான தகவல்கள் அழிந்து போயின! அதே ஆண்டில் அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் கலவரத்தால் கணக்கெடுப்பு நடத்தப் படவில்லை. 1991-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பிரச்சினையால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்படப்போவது உலகிலேயே இதுதான் முதல் முறை. எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுறது. இந்தியாவில் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.

உலகிலேயே அதிக மக்களை ஒரே புள்ளி விவரப்பட்டியலுக்குள் கொண்டு வர செய்யப்படும் மாபெரும் முயற்சியாகும் இது.

கவணத்தில் கொள்ள வேண்டியவைகள்:
கணக்கெடுக்க வருபவர்கள் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அதை பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் குடும்ப தலைவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை. விபரம் தெரிந்த குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவர் பதில் சொன்னால் போதும். 

மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டப்படி பணி செய்ய மறுப்பது சட்டப்படி குற்றம். அதேபோல் கணக்கெடுப்பாளரிடம் பதில் சொல்ல மறுப்பதும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். 

அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மக்கள் தொகை மற்றும் மக்களின் நிலமைகள் மிகவும் அவசியமாகிறது.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நம் நன்மைக்காகவே, பிறந்த தாய்நாட்டில் நம் உரிமையை மீட்டெடுக்க வேண்டுமானால் உண்மையை சொல்ல வேண்டும். படைத்தவனே பாதுகாவலன்.

அரசாங்க அதிகாரிகள் மக்கள் கணக்கெடுப்பு பணிக்காக வரும்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

அத்துடன் விபரமறியாத மக்கள் அதிகமிருக்கும் நம் சமூகத்திலுள்ளவர்களுக்கு சரியான விளக்கத்தையும் முன் கூடியே கொடுத்தால் அவர்களது பெயர் விடுபட்டுப்போகாமல் இருக்கும். ஆகவே ஒவ்வொரு மஹல்லாவைச் சேர்ந்தவர்களும் தங்கள் மஹல்லாவிலுள்ள எல்லோருடைய பெயரும் இடம்பெற துணை புரிய வேண்டும்.


சமுதாய இயக்க சகோதரர்களே, இதிலும் அரசியல் செய்யாமல் நம் உரிமையை மீட்டேடுக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக மிக அவசியம் என்பது நன் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை. நம் சமுதாய அனேக மக்கள் வெளிநாடுகளில் உள்ளார்கள், தயவு செய்து இதில் மக்களுக்கு உதவி செய்யுங்கள், குறிப்பாக படிப்பறிவு இல்லாத குடும்பங்களுக்கும், பெண்கள் அதிகம் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கும்.


வார்ட் உறுப்பினர்களே இதற்குமட்டுமாவது காசுவாங்காமல் உதவுங்கள் உங்களுக்கு ஓட்டுப்போட்டவர்களுக்காக. உண்மை மக்கள் தொகை எவ்வளவு என்று அறிந்தால் தானே அடுத்த வார்ட் தேர்தலில் நீங்கள் மீண்டும் வெற்றிப்பெற முடியும்.

மறந்துவிடாதீர்கள்! மண்ணின் மைந்தர்களாகிய எல்லோருடைய பெயரும் இந்த கணக்கெடுப்பில் இடம்பெறுவது மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.


மேற்கண்ட செய்தி இணையத்தேடலின் மூலம் சேகரித்தது, செய்தியில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். பயனுள்ள இந்த செய்தியை தெரிந்தவர்களிடம் தெரியப்படுத்துங்கள்.


நன்றி - அதிரைநிருபர் குழு

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்