மனிதனைப் படைத்து, வாழ்வதற்காக பூமிக்கு அவனை அனுப்புவதற்கு முன்பே, பூமியை அவனது சிறந்த வசிப்பிடமாக இறைவன் அமைத்துவிட்டான். இந்த பூமி எத்தனை கோடி மக்களையும் தாங்கும் ஆற்றல் உள்ளது. இங்குள்ள காற்று, நீர், நெருப்பு உள்ளிட்ட எல்லா இயற்கை வளங்களும் பூமியில் பிறக்கும் எல்லா உயிரினங்களுக்கும் தேவையைவிடக் கூடுதலாகவே உள்ளன.
இயற்கை வளங்களை மனிதன் பாழ்படுத்தாமலும் ஒரு நாட்டின் வளத்தை மற்றொரு நாடு கொள்ளையடிக்காமலும் இருந்தாலே போதும். அவ்வாறே, மனிதகுலத்திற்கு இறைவன் வழங்கியுள்ள மனித ஆற்றல் வளம் வற்றாத ஒரு நீரூற்று. அதை மனிதன் வளர்க்காமல் வீணடித்தாலோ, தவறாகப் பயன்படுத்தினாலோதான் சிக்கலே பிறக்கும்.
அதற்கு அல்லாஹ், “நீங்கள் (சொர்க்கத்திலிருந்து) கீழிறங்கிச் சென்றுவிடுங்கள்; உங்களில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். ஒரு காலம்வரை உங்களுக்குப் பூமியில் வசிப்பிடமும் வாழ்வாதாரமும் உண்டு” என்று கூறினான். (7:24)
பிறக்கும் அத்தனை பேருக்கும் பூமியில் வசிப்பிடம் உண்டு; வாழ்வதற்கு வாழ்வாதாரமும் உண்டு என்பதை இத்திருவசனம் தெளிவுபடுத்துகிறது.
மற்றொரு வசனம், “பூமியில் உள்ள எந்த உயிரினமானாலும், அதற்கு உணவைத் தருவது –அதாவது உணவைப் பெறும் வழியைக் காட்டுவது- அல்லாஹ்வின் பொறுப்பாகவே உள்ளது. அதன் இடத்தையும் உறைவிடத்தையும் அவன் அறிவான்” (11:6) என்று விவரிக்கிறது.
அதாவது பூமியில் வசிக்கின்ற சிறிய மற்றும் பெரிய உயிரினங்கள் உட்பட அனைத்துப் படைப்புகளுக்கும் உணவளிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுள்ளான். பூமியில் ஊர்வன, வானில் பறப்பன, நீரில் நீந்துவன என ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதனதன் இயல்புக்கேற்ப இறைவன் உணவளிக்கின்றான்.
காணொளி உதவி - முகநூல்
உயிரினங்களில் சில தன் கொடுக்காலும், வேறுசில அலகாலும், இன்னும் சில நகங்களாலும், இன்னும் சில கோரப் பற்களாலும் தம் உணவைத் தேடிக்கொள்கின்றன. இவ்வாறு ஒன்றை உண்டு மற்றொன்று வாழாவிட்டால், பூமியில் உயிரினங்கள் பெருகி நெருக்கடி ஏற்படும்; அல்லது இயற்கையாகச் செத்து பூமியே நாறும். (தஃப்சீர் அல்மனார்)
எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதனிடம் கடின உழைப்புடன் இறைவன்மீது உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அதுவும் ஆழ்மனத்தில் ஆழமாகப் பதிய வேண்டும்.
“இறைவன்மீது முறைப்படி நம்பிக்கை வைத்தால், பறவைக்கு உணவளிக்கப்படுவதைப் போன்று உங்களுக்கும் உணவளிக்கப்படும். பறவை ஒட்டிய வயிற்றுடன் காலையில் செல்கிறது; நிரம்பிய வயிற்றுடன் மாலையில் திரும்புகிறது” (திர்மிதீ) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆறறிவு இல்லாத பறவை, படைத்தவனை நம்பி கூட்டைவிட்டுப் புறப்படுகிறது. கிடைத்த ஆகாரத்தை உட்கொண்டுவிட்டு, குஞ்சுக்கும் இரையை எடுத்துக்கொண்டு கூடு திரும்புகிறது. ஆக, பறவைகூட நம்பிக்கொண்டு கூட்டிலேயே இருந்துவிடாமல், தீனியைத் தேடி வெளியே செல்கிறது கடினமகப் போராடுகிறது.
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!