இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான "ஹஜ்" கடமையை நிறைவேற்ற உலகின் அனைத்து திசைகளிலுமுள்ள இஸ்லாமியர்கள் கஃஅபத்துல்லாஹ்வை நோக்கிப் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் இந்நிலையில், நாம் துல்ஹஜ் மாதத்தை விரைவில் (இன்ஷா அல்லாஹ்) அடைய இருக்கிறோம்.
இந்த துல்ஹஜ் மாதமானது ஹஜ் செய்யக்கூடியவர்களுக்கு மட்டும் வணக்கத்திற்குரிய மாதமல்ல! நபி இப்ராஹீம்(அலை)மற்றும் அவர்களின் மைந்தரான இஸ்மாயீல்(அலை)அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, உலக முஸ்லிம்கள் அனைவரும் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை அறுத்துப் பலியிடும் ஒரு வணக்கத்தை நிறைவேற்றும் "ஈதுல் அள்ஹா" என்று சொல்லப்படும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமாகும். எனவே, இந்த துல்ஹஜ் மாதத்தில் "குர்பானி" என்று சொல்லப்படும் 'அறுத்துப் பலியிடுதல்' பற்றி இஸ்லாம் வகுத்துள்ள சட்டங்களை இப்போது நினைவுபடுத்திக் கொள்வோம்.
இஸ்லாத்தின் பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாகக் கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் "ஸதகத்துல் ஃபித்ரு" என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பதுபோல், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் "உள்ஹியா" எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது.
நபி(ஸல்)அவர்கள் காட்டித் தந்த வணக்கங்களில் "குர்பானி" கொடுப்பது என்பதும் ஒரு வணக்கமாகும். அல்லாஹ்தஆலா தனது திருமறையில் கூறுகிறான்.
"உமது இறைவனுக்காக தொழுது, மேலும் (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக!" (அல்குர்ஆன் 108:2)
நபி இப்ராஹீம்(அலை)அவர்கள் தமது மகனைப் பலியிடுவதாகக் கனவு கண்டு, அது இறைக் கட்டளை என்பதையுணர்ந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். அப்போது இறைக் கட்டளைக்கு உடனே அடிபணியும் அவர்களின் பணிவையும் தியாகத்தையும் இறைவன் ஏற்றுக்கொண்டு, அதைத் தடுத்து நிறுத்தி ஓர் ஆட்டைப் பலியிடச் செய்தான். இந்த வரலாற்று நிகழ்ச்சி திருக்குர்ஆனில் 37:102- 108 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. அதன் இறுதியில் "பின்வரும் மக்களிடையே இந்த நடைமுறையை நாம் விட்டுவைத்தோம்" என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
குர்பானி யார் மீது கடமை?
குர்பானி கொடுப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்றவேண்டும். ஏழ்மைப்பட்டவர்கள் மீது கடமையில்லை என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் வசதி இருக்கிறதோ இல்லையோ, மற்ற தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் சிலர் , குர்பானி போன்றவற்றுக்கு மட்டும் ரொம்ப யோசனை செய்வார்கள். எனவே இதுபோன்ற விஷயத்தில் தங்கள் மீது இது கடமையாகிவிட்டதா, இல்லையா என்பதை அவரவர் மனசாட்சியுடன் முடிவு செய்துக் கொள்வதே நல்லது. அதே சமயம் உண்மையிலேயே வசதியில்லாதவர்கள் சிரமப்பட்டு கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டுமென்பது அவசியமல்லாத ஒன்று. ஏனெனில் எந்த ஒருவரையும் அவரது சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். எனவே குர்பானி கொடுக்குமளவு வசதி பெற்றவர்கள், அவரவர் தகுதிக்குத் தக்கவாறு தனியாகவோ, கூட்டாகவோ கொடுக்கலாம்.
ஆடு, மாடு, ஒட்டகம்
இஸ்லாம் குறிப்பிட்ட சில பிராணிகளை மட்டும் உண்பதற்கு ஹலாலாக்கியுள்ளது. அவற்றில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளில் மட்டும்தான் குர்பானி கொடுக்க வேண்டும்.
அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காக அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!(அல்குர்ஆன் 22:28)
குர்பானிக்குரிய பிராணிகளைப் பற்றிய மேற்கண்ட வசனத்தில் சொல்லப்படும் "அன்ஆம்" என்ற வார்த்தை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை மட்டும் குறிப்பதாகும். எனவே அல்லாஹ்தஆலா குறிப்பிடும் இம்மூன்றைத் தவிர மற்ற எந்தப் பிராணியும் குர்பானிக்கு உரியதல்ல.
குர்பானி கொடுக்கும் ஆரம்ப நேரம்
பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பிறகிலிருந்து குர்பானிக்கான நேரம் ஆரம்பமாகின்றது. தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாகாது என்று நபி(ஸல்)அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த செலவுக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி என்ற) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக்(ரலி); நூல்:புகாரி (5546)
நபி(ஸல்)அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், யார் இத்தொழுகையை நிறைவேற்றிவிட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர்தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் எனக் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: பராஃ(ரலி); நூல்: புகாரி(955,5556)
நபி(ஸல்) அவர்களுடன் நான் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தொழுதேன். தொழுது முடிந்தபின் ஆடு ஒன்று அறுக்கப்பட்டுக் கிடப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்பொது "யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டானோ, அந்த இடத்தில் வேறொன்றை (தொழுகைக்குப் பின்) அறுக்க வேண்டும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜுன்துப் இப்னு சுப்யான்(ரலி); நூல்கள் : புகாரி, முஸ்லிம்
இந்த ஹதீஸ்களிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியதிலிருந்து தொடங்குகிறது என்பதையும் தொழுகைக்கு முன்பே யாராவது கொடுத்திருந்தால், மீண்டும் கொடுக்கவேண்டும் என்பதையும் அறிந்துக் கொள்ளலாம்.
'அஹ்மத்' என்ற ஹதீஸ் கிரந்தத்தின் குர்பானி பற்றி வரக்கூடிய 16151 வது ஹதீஸின் மூலமாக, 10 வது நாளான ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும் என்பதை அறிய முடிகிறது.
எனவே பெருநாள் தினத்தில் குர்பானி கொடுக்காவிட்டால், அதைத் தொடர்ந்து வரக்கூடிய 3 நாட்களிலும் கொடுத்துக் கொள்ளலாம்.
குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை
ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி); நூல்: நஸாயீ(4285)
அதாவது, ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் முடி, நகங்களை களையாமல் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. குடும்பத்தை நடத்திச் செல்லும் குடும்பத் தலைவர், தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார். அவர் மட்டும் முதல் பிறையிலிருந்து குர்பானியை நிறைவேற்றும் வரை முடி, நகங்களை களையாமல் இருக்கவேண்டும். (அல்லது குடும்பத்தின் பொறுப்பாளியாக இருக்கும் ஒரு குடும்பத் தலைவி மட்டுமோகூட அதுபோல் இருந்துக் கொள்ளலாம்.)
ஆனால், தானாகவே நகம், முடி ஆகியவை விழுந்தால் தவறேதுமில்லை. அதுபோல் நிர்பந்த நிலையில் உள்ளவர்களுக்கும் குற்றமில்லை. அதாவது நகம் கிழிந்து தொங்கிக் கொண்டு வலியை அதிகப்படுத்திக் கொண்டிருப்பதோ, அறுவை சிகிச்சை போன்ற காரணங்களுக்காகவோ அல்லது காயத்தை குணப்படுத்துவதற்காகவோ முடியை வெட்டவேண்டிய நிலை ஏற்பட்டாலோ, அதுபோன்ற சிரமமான நிலையில் முடி, நகங்களை வெட்டுவதில் தவறேதும் இல்லை. ஏனென்றால் அல்லாஹ்தஆலா எந்த ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டம் கொடுப்பதில்லை. எனவே நபி(ஸல்)அவர்களுடைய வழிமுறையை அல்லாஹ் பார்க்கிறான் என்ற அச்சத்தோடு நம்மால் முடிந்த அளவு பின்பற்றினால் போதுமானது. எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் (அல்குர்ஆன் 2:286)
மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸில் "துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை" என்று கூறப்பட்டுள்ளதால், குர்பானி கொடுக்கிறோமா இல்லையா என்ற முடிவில் வேண்டுமென்றே அலட்சியம் காட்டாமல், குர்பானி கொடுப்பதை இயன்றவரை பிறைக்கும் முன்பாகவே முடிவு செய்துக்கொண்டு, நகம் மற்றும் முடிகளை களையும் தேவையுடைய சந்தர்ப்பமாக இருந்தால், பிறைக்கு முன்பே களைந்துக் கொள்ளவேண்டும்.
ஆனால் பிறைக்கு பிறகு அந்த பத்து நாட்களுக்கு இடையில் குர்பானி கொடுப்பதற்கான வாய்ப்பு எதிர்பாராத விதமாக ஒருவருக்கு கிடைத்து, அப்போதுதான் அவர் முடிவு செய்ய முடிகிறதென்றால், அப்போதிலிருந்து குர்பானியை நிறைவேற்றும் வரை முடிகளையும் நகங்களையும் களையாமலிருக்க வேண்டும். அவ்வாறு முடிவெடிக்கும் முன்பு அவற்றைக் களைந்திருந்தால் குற்றமில்லை. எனினும் ஹஜ் மாத முதல் பிறைக்கு முன்பே அதுபற்றி முடிவு செய்துக் கொள்வது சிறந்த முறையாகும்.
தொடரும்... இன்ஷா அல்லாஹ்!
(பதிவு நீளமாக இருப்பதால், வாசகர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது)
நன்றி : பயணிக்கும் பாதை
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!