நமக்கு எல்லாவற்றிலும் சீஸன் உண்டு. அந்தந்த சீஸனில் அதற்கு தகுந்தால் போல் நம் "பற்று" மாறிக் கொண்டே இருக்கும். இப்போது தேர்தல் சீஸன்.
கட்சி மன்றங்களை அமைத்து அங்கே அரசியலுக்கு சம்மந்தமே இல்லாத ஆளை அங்கே அமர்த்தி வேடிக்கை பார்ப்பது தற்போது புதிய டிரான்ட் என்னவெனில் பேண்ட் இசைக்குழுவை அழைத்து திறந்த வேனில் தெருத் தெருவாக உலா வருவது ஏன்னா வேடிக்கைகளை பார்த்து தானே மக்களை கவர்வது, கந்தூரியில் உலா வருவதை வேடிக்கையென பார்த்து மகிழும் நம்மூர்காரர்களை நன்றாக புரிந்துள்ளனர் என்பதே இந்த வேடிக்கை நிகழ்வு,
எத்தனை நாள் தான் கட்சிகளின் காமெடி டிராமாக்களை பார்த்துக் கொண்டே இருப்பது? நமக்கு போரடிக்காதா சார்? எத்தனை நாள் தான் ஓட்டை மட்டும் போடுவது? மக்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடு படும் ஆசை நமக்கு மட்டும் வாராதா என்ன?
எனவேதான் நாமே ஒரு கட்சி துவங்கினால் என்ன என்று ஒரு யோசனை. திகைத்து நிற்காதீர்கள். முதுபெரும் தலைவர்கள் இருந்த நாட்டில் கட்சியும் அரசியலும் அத்தனை மலிவான கிள்ளுக்கீரை விஷயமாகி விட்டதே என்று நினைக்காதீர்கள். இப்பொழுதெல்லாம் கட்சி துவங்க ஒரு விவஸ்தையும் தேவையில்லை என்று உங்களுக்கும் எனக்கும் தெரிந்ததுதானே? கட்சியமைத்து தேர்தல் காலங்களில் நடிகை, நடிகர்களை பிரச்சாரத்திற்கு அழைத்து நம்ம தமிழக மக்களை வெகுவாக கவர்ந்திழுக்கலாம் என்பது அன்றாட நமது தமிழக கட்சிகளின் நிலை இதொன்றும் புதிதல்ல.
கட்சி என்றால் கொள்கை வேண்டுமே சார்... என்ன கொள்கை வைக்கலாம்? தமிழ் நாட்டில் அனைத்து கட்சிகளுக்கும் தமிழை காப்பாற்றுவது முக்கிய கொள்கையாக இருக்கிறது. தமிழுக்காக உயிர் விடும் தலைவர்கள் நிறைய பேர் இருப்பதால் தமிழை தொந்தரவு செய்யாமல் விட்டு விடுவோம்.
பாவம் தமிழ்.
மேடை பேச்சில் மயங்கி மயங்கியே தமிழ்நாட்டை தலைகீழாக மாற்றிய பெருமை கொண்டவர்கள் இல்லையா நாம்? எனவே நமது கொள்கைகளும் கொஞ்சு தமிழ் மொழியில் இப்போதைய கட்சிகளை மிஞ்சுவதாக இருக்க வேண்டாமா? உதாரணமாக,
"ஊழல் அற்ற சூழலுக்கு ஊது குழலாக இருந்து சூதுவாதற்ற அரசு அமைப்போம்" என்று முழங்கலாம்...
கச்சத்தீவு பற்றி பேசாமல் கட்சி நடத்த முடியுமா? "ஆதித் தமிழன் அரிசியை உலையிலும் கடலிலே வலையையும் போட்ட வரலாற்றை பறைசாற்றும் கச்சத்தீவை மீட்க இமயத்தின் உச்சதிற்கும் சென்று போராடுவோம்" என்று பொறி பறக்க பேசினால் தானே நாலு பேராவது நம்புவார்கள். கச்சத்தீவுக்கும் இமயமலைக்கும் என்ன சம்பந்தம் என்று யார் கேட்கப் போகிறார்கள்?
"ரோடு போடுவோம்" என்று சொன்னால் என்ன சார் சுவாரஸ்யம்? "காலை மாலை வேளையில் நீங்கள் வெளியே போகையில் காலை வைக்க சாலை தருவோம்" என்றால் கட்சியின் கவிஞர் அணிக்கு தலைமை தாங்கலாமே. ரோடு போட்டோமா இல்லையா என்று யாருக்கு கவலை?
"ஊசியாய் குத்தும் விலைவாசியை பற்றி யோசி தமிழா யோசி" என்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசலாம்...
நம் கட்சியில் சேர்பவர்களுக்கு கட்சியே "பட்டம்" கொடுத்து கெளரவிக்கும்.
நம் கட்சியின் தலைவர்கள் பல்வேறு நகரங்களில் இருந்து வரக்கூடும். அவர்களை எல்லாம் பேர் மட்டும் சொல்லி அழைத்தால் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் நாம் என்ற பழி நேர்ந்து விடாதா? சாதா பேரில் என்ன சார் இருக்கிறது? பட்டம் வேண்டும் சார் பட்டம்... எனவே, நம் கட்சியில் சேர்பவர்களுக்கு கட்சியே "பட்டம்" கொடுத்து கெளரவிக்கும். "தஞ்சையின் தங்கமே" "நெல்லையின் நெருப்பே" "மதுரையின் குதிரையே" "திருச்சியின் திருப்பமே" "கொங்கின் சங்கே" என்று என்னவேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் காக்கா...
கொள்கையெல்லாம் கிடக்கட்டும் முதலில் கட்சிக்கு என்ன பெயர்? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. வல்லினம் மெல்லினம் இடையினம் இவற்றில் எல்லாவற்றையும் சீட்டு போட்டு குலுக்கிப் பார்த்தாயிற்று. எந்த காம்பினேஷன் வந்தாலும் ஏதோ ஒரு கட்சிப் பெயரின் சுருக்கம் மாதிரியே இருக்கு. பேசாமல் "மக்களே கட்சியின் உயிர் அப்புறம் எதற்கு பெயர்?" என்று ஒரே போடா போட்டு விடலாமா?...காக்கா
அது சரி தேர்தல் நெருங்கி விட்டதே நாற்பது தொகுதிகளும் வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது என்று கேட்கிறீர்களா? கவலையே இல்லை காக்கா. கட்சியிலே மொத்தம் இருபதே பேர்தான் என்றால் கூட ஆளுக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாமே! "அகில இந்திய" என்ற சொல்லை கட்சியின் பெயரின் முன்னே சேர்த்தால் போதும். கட்சியின் பலம் பற்றி யார் காக்கா கேள்வி கேட்பது? அப்படியென்றால் "சைபர்" தான் கட்சியின் ரிசல்டா என்று கேட்கிறீர்களா? "பூஜ்யம் வெறும் கணக்கு ராஜ்ஜியமே எங்கள் இலக்கு" என்று சிரித்துக் கொண்டே பேட்டி கொடுக்க நமக்குத் தெரியாதா என்ன?..இன்னொன்றும் சொல்லலாம் தோல்வியே வெற்றியின் முதல் படி இதற்க்கு ஏன் தலைவா கவலைபடறே இப்படி என்று...
வாங்க காக்கா வாங்க பொதுக்குழு, செயற்குழு, பாராளுமன்ற குழு, பட்டிமன்ற குழு, நிர்வாகக்குழு, கலைக்குழு கவிதைக்குழு என்று எல்லா குழுக்களிலும் தலைவர் செயலாளர் பதவிகள் காத்திருக்கின்றன மக்கள் தொண்டாற்றும் மாபெரும் பணிக்கு உவகையுடன் அழைக்கிறோம் வாருங்கள்...! என்று விளம்பரமிட்டு தொடங்கலாம் அரசியல் ஒரு சாக்கடை என்று சொன்னவர்களே முதல் வரிசையில் நிற்பர்.
படித்து முடித்து விட்டீர்களா? அநேகமாக இதற்குள் புதிதாக ஏதேனும் ஒரு கட்சி உண்மையிலேயே உருவாகியிருக்கக்கூடும்...அதனாலென்ன? தேர்தல் என்பது நம்மை பொறுத்தவரை அலுவலகத்தில் உணவு வேளையிலும் வீட்டிலும் அமர்ந்தபடி திகட்டத் திகட்ட வெட்டிப் பேச்சு பேசக் கிடைத்த அருமையான சந்தர்ப்பம். பொழுது போக்கு. வேறென்ன அக்கறை? நாம் எப்படிப் பட்டவர்கள் என்று நமக்குத் தெரியாதா என்ன?
உதாரணமாக, கக்கன் போன்ற ஒருவரை கவர்மெண்ட் ஆஸ்பத்திரி கட்டாந்தரையில் கவனிப்பாரின்றி கிடக்க விட்ட கூட்டம் நாம். காலம் மெதுவாகத்தான் வேலை செய்யும். இப்போது இருப்பவர்கள் போதாதென்று புதிது புதிதாய் தலைவர்கள் வருவார்கள், நாட்டையும் நம்மையும் சுரண்டுவார்கள்.
- அதிரை தென்றல் (Irfan)
நன்றி கலி காலம்
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!