பள்ளி மாணவச்செல்வங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் அதனால் ஏற்படும் தீர்வு பற்றின ஆய்வு தொகுப்பு
நல்லா படி அது போதும்
பெற்றோர்களோ, ஆசிரியர்களோ நன்றாக படிக்கும் மாணவன் மீது அதீத கரிசனம் காட்டுவதும், சுமாராக படிக்கும் மாணவர்களை கண்டு கொள்ளாமல் விடுவதும் கண்கூடாக காண முடிகிறது. அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் கவனித்தாலே அவர்களுக்கு மன அழுத்தமோ வேறு எந்த சிக்கலுமே வர வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
பள்ளியில் படிக்கும் போதே மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளை முன்வைத்தேதான் மாணவர்களை உருவாக்குகின்றனர். இதுவும் அவர்களை அதீத மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. நீ எதுவாக விரும்புகிறாயோ அதுவாக விரும்பு என்று எந்த பெற்றோரும் கூறுவதில்லை. எனவேதான் பரிட்சையில் பாஸ் செய்து 1063 மதிப்பெண் வாங்கிய மாணவி கூட தற்கொலைக்கு தள்ளப்படுகிறாள்.
இன்றைய கல்வித் தகுதி மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நிர்ணயிக்கப் படுகிறது. இதனால் மதிப்பெண்ணை குறிவைத்து ஓடும் மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாவிட்டால் மனதளவில் சுருங்கிப் போய்விடுகின்றனர். இதுவே அவர்களை தற்கொலை வரை தூண்டுகிறது.
பள்ளி இறுதி ஆண்டுக்கு வந்துவிட்டாலே அவர்கள் விளையாட்டு, டிவி போன்ற பொழுது போக்கு அம்சங்களை தியாகம் செய்து விடுகின்றனர். 10ம் வகுப்பில் தொடங்கி 12ம் வகுப்பு தேர்வு முடியும் வரை அவர்களுக்கு ஜெயில் வாசம்தான் இதுவே அவர்களின் மனதில் ஒருவித ஏக்கத்தை உருவாக்குகிறது.
பணம் செலவழித்து படிக்கப் போடுகிறோம். அதற்கு நல்ல மதிப்பெண் வாங்கவேண்டும் என்று சொல்லி சொல்லி பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள்தான் இன்றைக்கு அதிகம் இருக்கின்றனர். உடன் படிக்கும் மாணவனை விட ஒரு மதிப்பெண் கூடுதலாக இருக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணம்,மதிப்பெண் காய்க்கும் மரமாக மாணவர்களை உருவாக்குவதுதான் அவர்களை மனஅழுத்தத்திற்கு காரணம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். பள்ளிகளில் வெறும் பாடங்களை மட்டுமே ஒப்பிக்க சொல்லி எழுதச் சொல்வதை விட வாழ்க்கையின் சவால்களை எப்படி சந்திப்பது என்று கற்றுக் கொடுக்கப்படுவதில்லை.
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித் திறமை உண்டு அதனை கண்டுபிடித்து அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும். அதை விடுத்து நர்சரி பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்கள் மீது பாடச்சுமையை திணிப்பதுதான் அவர்களின் மன அழுத்தம் அதிகரிக்க காரணமாகிறது என்கின்றனர் நிபுணர்கள். எனவே மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதை கருத்தில் கொள்வார்களா?
பள்ளியில் நெருக்கடி:
பள்ளியின் நிர்வாகம் தன் பள்ளி 100% தேர்ச்சி பெற வேண்டும்; முதல் மதிப்பெண் பெறவேண்டும்; மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்று ஆசிரியர்களை வற்புறுத்த, அவர்கள் அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் மாணவர்களை நெருக்க, வீட்டிலும் பள்ளியிலும் மாறி மாறி மாணவர்கள் சாறுபிழியப்படுகிறார்கள்.
பெற்றோர்களும் பிள்ளைகளைப் பணம் ஈட்டும் கருவியாக ஆக்காமல் உணர்வுள்ள மனிதப் பிறவியாக எண்ணிச் செயல்பட வேண்டும்.
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:
1) 5 வயதிற்கு முன் பள்ளியில் சேர்ப்பதைக் கட்டாயம் தடுக்க வேண்டும்.
2)அப்படிச் சேர்க்கப்பட்டால் அக்கல்வி நிறுவனங்கள் வகுப்பறையில் மாணவர்களை அடைத்துப் பாடம் நடத்தாமல், அவர்களை நன்றாக விளையாடி மகிழச் செய்து, அதன்வழி சில சுமையற்ற அடிப்படைக் கல்வியைப் புகட்ட வேண்டும். அதாவது, பிள்ளைகள் ஆர்வத்தோடு அங்கு (பள்ளிக்கு) செல்லும் சூழல் மட்டுமே இருக்க வேண்டும். பள்ளிக்குச் செல்ல குழந்தைகள் முரண்டு பிடித்தால் அவர்களுக்கேற்ற சூழல் அங்கில்லை என்பதே பொருள்.
3) மனப்பாடத்திற்கு மதிப்பெண் அதிகம் தராமல் செயல்முறையில் அறிவை வளர்க்க, அறிவைச் சோதிக்க கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
4) படைப்பாற்றல் வளர்க்கும் கல்வியாகவும், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கல்வியாகவும் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். மாணவனின் எதிர்கால வாழ்வில் (அவன் ஆற்றும் பணிக்கு) அது பயன்பட வேண்டும்.
(5) மாணவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, மதச் சார்பற்ற நீதிநெறி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கற்பிக்கப்பட வேண்டும். பள்ளியின் காலைப் பேரவைக் கூட்டத்தில் 5 நிமிடம் அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் அறிவுரை வழங்க வேண்டும்.
(6) நன்னடத்தைக்கும், பொதுத் தொண்டாற்றியமைக்கும், விளையாட்டுப் போட்டியில் பெற்ற வெற்றிக்கும் மதிப்பெண் பொதுத் தேர்வில் சேர்க்கப்பட்டு, அம்மதிப்பெண், தொழிற்கல்வியில் சேர்வதற்கு இடம் அளிக்க, கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
7) மருத்துவம் பயில இடம் அளிக்கும்போது, மாணவர்களின் தேர்வு மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படுகிறதே தவிர, அம்மாணவருக்குப் பொதுத் தொண்டில் ஆர்வம் இருக்கிறதா? மனித நேய மனம் இருக்கிறதா? மக்களுக்குச் சேவை செய்யும் விருப்பம் இருக்கிறதா? என்பவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. இவை இல்லாத மருத்துவராய் அவர் வந்து என்ன பயன்?
8) பெற்றோர் ஆசிரியர் தொடர்பு:
மாணவர்களின் மன இறுக்கத்திற்கும், மாணவர்கள் தடம் புரண்டு செல்வதற்கும் பெற்றோரே பெருங்காரணம். பள்ளியில் சேர்த்து விட்டதோடு தங்கள் கடமை முடிந்தது எனக் கருதும் பொறுப்பில்லா நிலையாலே இவை நிகழ்கின்றன.
பெற்றோர் வாரம் ஒரு முறையாவது பள்ளிக்குச் சென்று, தங்கள் பிள்ளையினுடைய நிலை குறித்து ஆசிரியரிடம் அறிய வேண்டும். பெற்றோர்கள் வருவார்கள் என்று தெரிந்தாலே மாணவர்களின் செயல்பாடுகள் வரம்பிற்குள் வரும்.
9) சான்றோர் கூட்டம்: மாதம் ஒருமுறை ஒரு சான்றோரை அழைத்து வந்து, மாணவர்களைக் கூட்டி, மதம் சாரா நன்னெறிக் கருத்துகளை மாணவர்களுக்குச் சொல்லச் செய்ய வேண்டும்.
அன்பால் திருத்த வேண்டும்: அடித்து, திட்டி, தண்டித்துத்தான் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாணவர்கள் மீது நமக்கு அன்பும், அவர்கள் முன்னேற்றத்தில் நமக்கு அக்கறையும் இருக்கிறது என்று மாணவர்கள் அறிந்தால், அந்த ஆசிரியர் சொற்படி கட்டாயம் நடப்பர்.
தங்கள் அதிகாரத்தை, மேன்மையைக் காட்டும் நோக்கத்துடன் ஆசிரியர்கள் நடந்து கொண்டால், அது மாணவர்களிடையே வெறுப்பை, எதிர்விளைவையே ஏற்படுத்தும்.
-அதிரை தென்றல் (Irfan Cmp)
0 உங்களின் கருத்து (Comments):
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!